Sahih Muslim
1661.01

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) "ரபதா" எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், "அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?" என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்: எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப்பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்று கூறிவிட்டு, "(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

1661.02

மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) மற்றும் அபூமுஆவியா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்பதற்குப் பின் "நான் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக்கால கட்டத்திலுமா (அறியாமைக்காலக் கலாசாரம் கொண்டவனாய் உள்ளேன்)?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்று கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இன்னும் சற்றுக் கூடுதலாக) "ஆம். நீர் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்த காலக்கட்டத்திலும் (அறியாமைக் காலக் கலாசாரம் கொண்டவராய் இருக்கின்றீர்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது. ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்திவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) அவரை விற்றுவிடட்டும்" என்று இடம்பெற்றுள்ளது. ஸுஹைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்பணியில் அவருக்கு ஒத்துழைக்கட்டும்" என இடம்பெற்றுள்ளது. அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பு, "அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்பதோடு முடிவடைந்துவிடுகிறது. "அவரை விற்றுவிடட்டும்" என்பதோ, "அவருக்கு ஒத்துழைக்கட்டும்" என்பதோ அவரது அறிவிப்பில் இடம் பெறவில்லை. அத்தியாயம் :

1661.03

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்மீது ஒரு மேலங்கியும் அவர்களுடைய அடிமை யின் மீது அதே மாதிரியான மேலங்கியும் இருப்பதைக் கண்டேன். நான் அது குறித்து அவர் களிடம் வினவியபோது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு (அடிமை) மனிதரை ஏசும் போது, அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். (அடிமைகளான) அவர்கள் உங்கள் சகோதரர்களும் ஊழியர்களும் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அப்பணியில் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழையுங்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :